துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 15-ந்தேதி சேலம் வருகை
- துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு சேலம் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதே போல மற்ற இடங்களுக்கும் காணொலி வாயிலாக இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
பிற்பகல் 3 மணியளவில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மறு சீராய்வு கூட்டத்தில் பங்கேற்கும் அவர் மாவட்டத்தில் ஏற்கனவே செய்துள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். தொடர்ந்து இனி வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த நிகழ்வுகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி, எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை மறுநாள் 15-ந் தேதி மாலை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் சேலம் வருகிறார். அப்போது அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் கட்சியினர் பல ஆயிரம் பேர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் அவர் வந்து செல்லும் பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் ஆகியோர் தலைமையில் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.