தமிழ்நாடு செய்திகள்

இளைஞர்களின் வளர்ச்சியில் திராவிட மாடல் அரசு- துணை முதலமைச்சர் பெருமிதம்

Published On 2025-08-12 12:28 IST   |   Update On 2025-08-12 12:28:00 IST
  • நாளைய உலகை மாற்றப்போகும் திறமைமிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை உலகமே உற்று கவனிக்கிறது.
  • 50 சதவீதத்துக்கு மேலான நிறுவனங்களை தலைமை எடுத்து நடத்துவது பெண்கள் தான்.

சென்னை:

தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சிக்காக, 4 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகளும், திட்டங்களில் பயனடைந்தவர்கள் குறித்தும் விளக்கும் வீடியோவை துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் வெளியிட்டு உள்ளார்.

நாளைய உலகை மாற்றப்போகும் திறமைமிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை உலகமே உற்று கவனிக்கிறது. தமிழ்நாட்டின் இளைய சமுதாயம் உலகை வெல்ல தயார் நிலையில் உள்ளது எனத் துவங்குகிறது வீடியோ பதிவு.

விழுப்புரம் இளைஞனின் வியாபார முன்னேற்றம், கோவை இளம்பெண் இஸ்ரோ வரை பணிக்கு சென்றது. மதுரை இளைஞன் ஜெர்மனி சென்று வாழ்க்கையில் உயர்ந்தது என திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையானவற்றை சரியாக செய்து உள்ளதை விளக்கிச் செல்கிறது இந்த வீடியோ பதிவு.

குறிப்பாக, நான் முதல்வன் முதல் ஸ்டார்ட் ஆப் டிஎன் வரை, புதுமைப்பெண் முதல் தமிழ்புதல்வன் திட்டங்கள் வரை, திராவிட மாடல் அரசு இளைஞர்கள் நலனுக்கான அரசு என விளக்கப்படுவதுடன், ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ தகவல்படி, இந்தியாவில் உள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 8 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உள்ளன என்பதை குறிப்பிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள, 11 ஆயிரம் நிறுவனங்களில், 8500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடந்த 4 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் உருவானவை. இதில் 50 சதவீதத்துக்கு மேலான நிறுவனங்களை தலைமை எடுத்து நடத்துவது பெண்கள் தான். இதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்பதை தரவுகளுடன் விளக்குகிறது இந்த வீடியோ பதிவு.

கடந்த 4 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 272 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதில் 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

மேலும் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விரிவுரையாளர்களுக்கும் நான் முதல்வன் திட்டம் மூலமாக திறன்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து உலகையே வெல்லக்கூடிய வகையில் அவர்களை தயார்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு என்று கூறி வீடியோ பதிவு நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News