மேகதாது அணை கட்டப்பட உள்ள இடம் - பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு
மேகதாது அணை கட்டினால் பாலைவனமாகும் டெல்டா மாவட்டங்கள் - விவசாய சங்கங்கள் எதிர்ப்பு
- மேகதாது பகுதி இரண்டு மலைகளுக்கு நடுவில் உள்ளது.
- தமிழக மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு நேரடியாக வருகிறது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி ஆகிய அணைகளை நிரப்புகிறது. பின்னர் அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு ஒகேனக்கல் வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது. பின்னர் அங்கிருந்து பயணிக்கும் காவிரி ஆறு மேட்டூர் அணையை வந்தடைகிறது.
மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் இருப்பை பொறுத்து மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடைபெறும். இது தவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடலில் கலக்கிறது.
இதற்கிடையே தமிழக-கர்நாடகா இடையே நீர்பங்கீடு பிரச்சனை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மழைக்காலங்களில் உபரிநீரை காவிரியில் திறந்து விட்டு தமிழகத்துக்கான பங்கீட்டை அளவுக்கு அதிகமாக வழங்கி விட்டதாக ஒவ்வொரு முறையும் கர்நாடக அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில் பெங்களூரு மாநகரின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே ராம்நகர் மாவட்டம் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணையை கட்ட 2018-ம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.14 ஆயிரத்து 500 கோடியாகும். மேலும் இந்த அணைக்காக 4,716 ஹெக்டேர் காடுகளும், 280 ஹெக்டேர் வருவாய் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர மேகதாது அணையில் 67 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கவும், இதன் மூலம் பாசனம் மற்றும் குடிநீர், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவின் மேதாது திட்டத்துக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று நீதி பதி தீர்ப்பு வழங்கினார்.
அதில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டப்படியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கலாம், எனவே கர்நாடக அரசு கடந்த 2018-ம் ஆண்டு சமர்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரிய தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மனுக்கள் உரிய நேரத்துக்கு முன்பே தாக்கல் செய்துள்ளதை கருத்தில் கொண்டு மனுக்கள் முடித்து வைத்து தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்புக்கு கர்நாடக அரசு வரவேற்று உள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் கூறும்போது, மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்கு அதிக நன்மை பயக்கும். கடினமான காலங்களில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட இந்த திட்டம் உதவும். எனவே இந்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-
1924-ம் ஆண்டில் அப்போதைய சென்னை மாநில அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கர்நாடகம் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே காவிரியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய அந்த ஒப்பந்தம் அனுமதி வழங்கியது.
அதேபோன்று 400, 500 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது. மேலும் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேட்டூரில் தமிழக அரசும், கிருஷ்ணராஜ சாகரில் கர்நாடக அரசும் அணைகளை கட்டிக் கொண்டது.
அதன்படி 50 ஆண்டுகள் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் கிடைத்தது. அதன் பின்னர் 1974 முதல் 78 வரை தமிழக அரசியல்வாதிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் கர்நாடகம் கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, ராம தீர்த்தம், லட்சுமண தீர்த்தம் ஆகிய 5 அணைகளை கட்டி இன்றைக்கு 28 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்கிறது.
நமது சாகுபடி பரப்பளவு சுருங்கியது. பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயிகளும், தமிழக அரசும் விழித்துக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காரணத்தினால் 2007-ல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர் 2018 உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்துக்கு காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் தண்ணீர் அவர்கள் முறையாக திறப்பதில்லை.
தற்போது மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். அதன் மூலம் பெட்ரோல், டீசல், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை இங்கு செயல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு வசதியாக இருக்கும்.
மேகதாது பகுதி இரண்டு மலைகளுக்கு நடுவில் உள்ளது. இந்த மலையின் ஒரு பகுதி கர்நாடகத்திலும் இன்னொரு பகுதி தமிழகத்திலும் உள்ளது. அதன் நீர் வழித்தடம் கர்நாடகாவில் உள்ளது.
தற்போது தமிழக மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு நேரடியாக வருகிறது. மேகதாதுவில் அணை கட்டும் போது அந்த நீர் நமக்கு வராது.
அதுமட்டுமல்லாமல் காவிரியில் நமக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதே அளவாக உள்ளது. தற்போது மேகதாது அணை அந்த வழித்தடத்தில் கட்டப்படுவதால் நமக்கு வரும் தண்ணீரின் அளவும் தெரியாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவோடு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இது உச்சநீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் உடையது. இதற்கு முன்பு தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் காவிரிநீர் தொடர்பான பிரச்சனை வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து காவிரி நடுவர் மன்றத்தில் முறையிடுங்கள் என கூறியது வரலாறு. அப்படி இருக்கையில் தற்போது மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கைக்கு கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்தது அரசியல் சட்ட சாசனத்தை மீறும் செயலாகும்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக உள்ளார். மேகதாதுவில் அணை கட்டினால் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் பறிபோகும். 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாகி விடும். டெல்டா விவசாயிகள் அகதிகளாக வெளியேறும் சூழ்நிலை உருவாகும்.
எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி மேகதாது விவகாரம் தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போகிறதா? சட்டப்படி என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம் ? என்பதை உடனே தெளிவுப்படுத்த வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் கர்நாடக அரசை மேகதாதுவில் அணை கட்ட விடக்கூடாது. அதனை தடுத்து தமிழகத்தின் உரிமையை மீட்க உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.