சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்குவதில் தாமதம்
- சோதனை ஓட்டம் நடைபெற்றபோது ஏ.சி. பகுதியில் அதிர்வு பிரச்சனை எழுந்தது.
- இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் நடைபெற்றபோது ஏ.சி. பகுதியில் அதிர்வு பிரச்சனை எழுந்தது. இதையடுத்து அது சரி செய்யப்பட்டது. தற்போது ஏ.சி. மின்சார ரெயில் பயணிகள் சேவையை தொடங்குவதற்காக தாம்பரம் பணிமனையில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைத்தபோது அதனுடன் சேர்த்து சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது தொடக்க
விழா நடத்தப்படவில்லை.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் ஏ.சி. வசதி கொண்ட 14 புதிய புறநகர் ரெயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன. ஆனால் அப்போதும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்கும் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரெயில் முதல் முறையாக இயக்கப்பட உள்ளது. தற்போது சிறப்பு விருந்தினரின் தேதிக்காக ரெயில் தொடக்க விழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏ.சி. மின்சார ரெயில் சேவை, வழக்கமான மின்சார ரெயில்களை போல நாள் முழுவதும் இயங்காது. அதிகாலை 5.45 மணி முதல் காலை 10.30 மணி வரையும், பிற்பகல் 3.45 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் இயங்கும். நடுவில் 5 மணி நேரம் தாம்பரத்தில் பராமரிப்பு பணி நடைபெறும்.
தற்போது ஒரே ஒரு ஏ.சி. மின்சார ரெயில் மட்டுமே உள்ளதால் இந்த இடைவேளை விடப்படுகிறது. இந்த ஏ.சி. மின்சார ரெயில் மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், பொத்தேரி, பரனூர், உள்ளிட்ட 12 முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். இதற்கான கட்டணம் மெட்ரோ ரெயிலை போலவே ரூ.30 முதல் ரூ.50 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.