டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை - நாகையில் கடல் சீற்றம்
- கனமழை காரணமாக நாகை நகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதிக்குள் மழைநீர் புகுந்தது.
- கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
"டிட்வா" புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அவர்கள் 60 வகையான பாதுகாப்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து தரைக்காற்று வீசியது. அதைத்தொடர்ந்து வேதாரண்யம், தலைஞாயிறு, செம்போடை, ஆயக்காரன்புலம், வாய்மேடு, கரியாப்பட்டினம், கோடியக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
மேலும் இந்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் உடனடியாக அவர்களை அழைத்து வந்து நிவாரண முகங்களில் தங்க வைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ந்து இடைவிடாது பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கனமழை காரணமாக நாகை நகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. இப்பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகளை இப்பகுதி மக்கள் சந்தித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர். எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நாகையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் 6-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதையடுத்து அவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் நாகை மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு(சென்டிமீட்டரில்):-
நாகப்பட்டினம்-6.12, திருப்பூண்டி-9.24 , வேளாங்கண்ணி-9.54 , திருக்குவளை-4.61, தலைஞாயிறு-8.76, வேதாரண்யம்-14.56, கோடியக்கரை-20.36.
வேதாரண்யத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்து வைத்துள்ள காட்சி.
இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பல்லவராயன் கட்டளை, புழுதிக்குடி, விக்கிரபாண்டியம், கோட்டூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 1,000 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஏக்கருக்கு ரூ.8,000 வரை செலவு செய்துள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் கிளை வாய்க்கால்கள் தூர்வாராமல் இருப்பதால் மழைநீர் வடியாமல் உள்ளது. எனவே கிளை வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொள்ளிடம், புத்தூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, பூம்புகார், பழையாறு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முதல் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் கடுமையான கடல் சீற்றம் உள்ளது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குருங்குளம், ஒரத்தநாடு, நெய்வாசல்தென்பாதி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டின், மதுக்கூர், பேராவூரணி என மாவட்டத்தின அனைத்து இடங்களிலும் இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்சம்பா,தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. அதிராம்பட்டினம் கடற்கரையில் புயலால் பலத்த காற்று வீசியப்படி கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர் மழைக்கு 1 வீடு இடிந்துள்ளது. 3 கால்நடைகள் இறந்துள்ளன.