தமிழ்நாடு செய்திகள்

சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் கலெக்டர் அனுமதி தரவில்லை- ரெயில்வே குற்றச்சாட்டு

Published On 2025-07-08 12:58 IST   |   Update On 2025-07-08 12:58:00 IST
  • கேட் கீப்பரான வடமாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
  • இருசக்கர வாகன ஓட்டிகள் அழுத்தம் கொடுத்ததால் கேட்டை திறந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீது தாக்குதலும் நடத்தினர்.

இதனிடையே, ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது. கேட்டை மூட கீப்பர் முயன்றபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்க கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேன் ஓட்டுநர் கோரியிருந்தாலும் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்திருக்க கூடாது என்று கூறிய தென்னக ரெயில்வே கேட் கீப்பரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கேட் கீப்பரான வடமாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, ரெயில் விபத்து நிகழ்ந்த இடத்தை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் பேசிய அன்பழகன், காலை 7.10-க்கு ரெயில் வருவதை அறிந்து 7.06-க்கு கேட்டை, கேட் கீப்பர் மூடியுள்ளார். ரெயில் வருவதற்குள் கடந்து விடுகிறோம் என இருசக்கர வாகன ஓட்டிகள் அழுத்தம் கொடுத்ததால் கேட்டை திறந்துள்ளார். கேட் கீப்பர் செய்தது தவறு தான். அப்படி திறந்திருக்கக்கூடாது என்று கூறினார்.

இதற்கிடையே, கடலூர் கலெக்டர் மீது தெற்கு ரெயில்வே குற்றம் சாட்டியுள்ளது. செம்மங்குப்பம் பகுதியில் சுரங்க பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்தும் கடந்த ஒரு வருமாக கலெக்டர் அனுமதி தரவில்லை என தெற்கு ரெயில்வே குற்றம் சாட்டியுள்ளது.

Tags:    

Similar News