கள்ளக்குறிச்சி மாணவி கொலை வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
- சிசிடிவி ஆதாரங்களில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் வசித்த 17 வயது சிறுமி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், கடந்த 13-7-20222-ந்தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு, ஜூலை 17-ம் தேதி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதனிடையே, மாணவி மர்மம் தொடர்பான வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
விசாரணை சட்டப்படி நடைபெற்றது. சிசிடிவி ஆதாரங்களில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை. விசாரணையில் தவறு காணப்படவில்லை என கூறிய நீதிபதி, தற்கொலை செய்து கொண்டதற்கான முகாந்திரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருப்பதால் இம்மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.
3 ஆண்டுகளாக மனு மீது விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.