தமிழ்நாடு செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய தலைவர்களின் முக்கிய கருத்துக்கள்

Published On 2025-03-05 14:21 IST   |   Update On 2025-03-05 14:21:00 IST
  • மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது.
  • முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

இதைதொடர்ந்து, முதலமைச்சரின் தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய தலைவர்களின் முக்கிய கருத்துக்கள் வருமாறு:-

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: நாடாளுமன்றத்தில் தமிழ் நாட்டின் 7.2 என்ற தற் போதைய பிரதிநிதித்துவம் குறைக்கப்படக்கூடாது என்று தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். தீர்மானத்துக்கு அ.தி.மு.க. முழு ஆதரவு அளிக்கிறது.

பா.ம.க. தலைவர் அன்புமணி: முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திரு மாவளவன்: தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நட வடிக்கை குழு"வை விசிக வரவேற்கிறது. தொகுதி மறுவரையறையில் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன்: ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: விகிதம் என்ற வரையறையில் குழப்பம் இருக்கிறது. நம் மாநில எம்.பி எண்ணிக்கை குறையவில்லை என்பது பிரச்சினையில்லை. வட மாநிலங்களில் அதிகரிக்கப்பட்டால் அது பிரச்சினை.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்: தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7.2 சதவீதம் என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ: அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள சரியான முடிவு ஆகும். தமிழகத்தின் உரிமையை எந்த கால கட்டத்திலும் யாராலும் விட்டுக் கொடுக்க முடியாது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு கட்சியின் பிரச்சினை இல்லை. நம் மாநிலத்தின் பிரச்சினை ஆகும். இதை அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ள 5 கட்சிகளும் உணர வேண்டும்.

தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை, கருணாஸ்: மக்களின் உரிமைகளை பறிப்பதற்கான முயற்சியாகத்தான் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை பார்க்கிறோம்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தனியரசு: தொகுதி மறுசீரமைப்பின் பிரச்சனையை உணர்ந்து முதல் முதலாக குரல் கொடுத்தது முதலமைச்சர் ஸ்டாலின்தான்.

மனிதநேய ஜனநாயக கட்சி, தமிமுன் அன்சாரி: தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் உச்சி மாநாட்டை முதலமைச்சர் கூட்ட வேண்டும்.

உலகத் தமிழர் பேரமைப்பு, பழ நெடுமாறன்: எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநில முதலமைச்சர்களிடம் பேசி இந்த சதித் திட்டத்தை முறியடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும்.

புரட்சி பாரதம், ஜெகன் மூர்த்தி: தமிழ்நாட்டில் தொகுதிகளில் எண்ணிக்கை குறைந்தால் பட்டியல் சமூக மக்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையும். இதனை கடுமையாக எதிர்க்கிறோம்.

Tags:    

Similar News