தமிழ்நாடு செய்திகள்

அரக்கோணம் தி.மு.க. பிரமுகர் மீது புகார்: நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டது- கல்லூரி மாணவி உருக்கம்

Published On 2025-05-20 12:13 IST   |   Update On 2025-05-20 12:13:00 IST
  • என்னிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் புகார் மனுவிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை முன்வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.
  • இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன்னை முக்கிய பிரமுகர்களுக்கு இறையாக்க முயற்சி மேற்கொண்டார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என புகார் மனுவில் கூறி இருந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கல்லூரி மாணவி திடீரென உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் என்னிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் புகார் மனுவிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை முன்வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இதனால் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டது.

மேலும் சமூக வலைத்தளங்களில் என்னுடைய முகத்தை பதிவிட்டுள்ளதை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தும் பயன் இல்லாமல் போனது.

பாதிக்கப்பட்ட நான் இதுபோன்ற நபர்களை அடையாளம் காட்டி சமூகத்தில் பெண்களுக்கு தைரியத்தை வரவழைக்கவே புகார் கொடுத்தேன். ஆனால் தற்போது என்னை போலீசார் கோழை ஆக்கிவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News