தமிழ்நாடு செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் வாழ்வு ஒளிமயமாக திகழ பாடுபடுவோம்- முதலமைச்சர் வாழ்த்து

Published On 2025-12-02 14:01 IST   |   Update On 2025-12-02 14:01:00 IST
  • மாற்றுத்திறனாளிகள் பிறரைச்சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது.
  • மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத் திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் டிசம்பர் 3-ம் நாளில், மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்புகள் வழங்கி அவர்கள் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

ஆண்டுதோறும் இந்நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் முக்கிய உறுதிமொழி வெளியிடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் அதாவது "மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயம் வளர சமூக ஏற்றம் மலரும்" என அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எனும் உன்னத கொள்கையின் அடிப்படையில் இல்லம் தேடி உதவி வழங்கும் வகையில், உலக வங்கியின் கடன் உதவி மூலம் செயல்படுத்தப்படும் 'தமிழ்நாடு உரிமைகள் திட்டம்' மூலம் மாற்றுத் திறனாளிகள் பயனடைய பல்வேறு துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே மறுவாழ்வு சேவைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகள் தேவைகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து, பயனாளிகளுக்கு வயது மற்றும் உடல் நலத்திற்கு ஏற்ற சிகிச்சைகள் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற நவீன உதவி உபகரணங்களை தன்னிறைவு எய்தும் வகையில் வழங்கி, மாற்றுத்திறனாளிகள் பிறரைச்சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கியும், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளை ஒதுக்கியும், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் ஏற்றம் காண சமுதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினர்களாக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத் திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News