தமிழ்நாடு செய்திகள்

ஆவடி சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-01-04 11:45 IST   |   Update On 2025-01-04 11:45:00 IST
  • சிறுமி வீடு திரும்பினாலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார்.
  • பள்ளி செல்ல தொடங்கிய சிறுமி டான்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரிநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதி. இவர்களின் மூத்த மகளான ஒன்பது வயதான சிறுமி டான்யா அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தது குறித்து செய்திகள் வெளியாகின.

அதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சிறுமி டான்யாவின் வீட்டுக்கு சென்று பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து சிறுமிக்கு முக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனை தொடர்ந்து சிறுமி வீடு திரும்பினாலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். இதில் சிறுமியின் முகம் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் சில அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சைகளும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து சிறுமி டானியா பள்ளி செல்லத்தொடங்கினார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில், முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமி டான்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் முறையான சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News