ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
- பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூக்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
- நாளை கண்காட்சி தொடங்கியதும் புல்வெளியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தினமும் இங்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
கோடைவிழாவின் சிகர நிகழ்ச்சியான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை தொடங்குகிறது.
கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களையும் பார்வையிடுகிறார். நாளை தொடங்கும் கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
கண்காட்சியை முன்னிட்டு, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, பிக்கோனியா, பால்சன், டேலியா, கிராந்தியம், லில்லி உள்பட பல்வேறு வகையான மலர்களும் பூத்து குலுங்குகின்றன.
இவை பூங்காவில் உள்ள மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் பூக்கள் பூத்து குலுங்கி கொண்டிருக்கிறது. பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த பூக்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
கண்காட்சியையொட்டி பூங்காவில் பல வண்ண மலர்கள் மற்றும் பொருட்களை கொண்டு பல்வேறு வகையான அலங்காரங்களும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
நீலகிரி மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பூங்கா முழுவதும் அலங்காரம் செய்யும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. பூங்காவின் நுழைவு வாயிலில் பல வண்ண மலர்களை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையிலும் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணிகளும் நடக்கிறது.
தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாளை கண்காட்சி தொடங்கியதும் புல்வெளியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
ஊட்டி மலர் கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு ஊட்டியில் இருந்தும், மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோட்டில் இருந்து ஊட்டிக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதுதவிர ஊட்டியில் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்ப்பதற்கு வசதியாக 30 சர்க்கியூட் பஸ்களும் இயக்கப்பட உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.