தமிழ்நாடு செய்திகள்

கோவை - திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு

Published On 2025-08-10 13:33 IST   |   Update On 2025-08-10 13:33:00 IST
  • ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
  • உடுமலை நகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

உடுமலை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கள ஆய்வுப்பணி மேற்கொள்கிறார்.

இதற்காக இன்று மாலை 5.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார்.

2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு உடுமலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு உடுமலை நகராட்சி சார்பில் வாரச்சந்தை வளாகத்தில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முழு உருவ வெண்கல சிலைகளை திறந்து வைக்கிறார். பின்னர் உடுமலை நேதாஜி மைதானத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.949 கோடியே 53 லட்சம் மதிப்பில், 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பதுடன், ரூ.182 கோடியே 6 லட்சம் மதிப்பில் 35 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

நகராட்சித்துறையின் சார்பில் ரூ.34 கோடியே 80 லட்சம் மதிப்பில் திருப்பூர் மாநகராட்சி கோவில் வழி யில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம், திருப்பூர் வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.41 கோடி மதிப்பில் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம், திருமுருகன்பூண்டியில் ரூ.39.44 கோடி மதிப்பில் கட்டப் பட்டுள்ள டைடல் பூங்கா ஆகியவற்றை காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

மேலும் ரூ.295 கோடியே 29 லட்சம் மதிப்பில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

பின்னர் 11.30 மணிக்கு உடுமலை நகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பகல் 12 மணிக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு புறப்பட்டு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி யில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் திட்ட வளாகத்தில் பி.ஏ.பி., பாசன திட்டம் அமைய காரணமானவர்களான காமராஜர், சி.சுப்பிர மணியம், வி.கே.பழனிச்சாமி கவுண்டர், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் முழு உருவ சிலைகளை திறந்து வைக்கிறார்.

அதன்பிறகு பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமான பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினை வரங்கத்தை திறந்து வைக்கிறார். மதியம் 2 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

உடுமலையில் 2 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். கோவை, மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News