தமிழ்நாடு செய்திகள்

ஜாமின் கையெழுத்து போட்டதால் வந்த துயரம்: மனைவியுடன் 'வீடியோகாலில்' பேசியபடி தூய்மை பணியாளர் தற்கொலை

Published On 2025-04-09 12:33 IST   |   Update On 2025-04-09 12:34:00 IST
  • கடன் வாங்கிய நபர் இறந்து விட்டதால் அந்த கடனை மாதம் தோறும் தனது சம்பளத்தில் இருந்து ஜான் தேவராஜ் கொடுத்து அடைத்து வந்தார்.
  • பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து கடன் கொடுத்தவர்கள் யாரேனும் மிரட்டினார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரம்பூர்:

சென்னை புளியந்தோப்பு நரசிம்மன் நகரை சேர்ந்தவர் ஜான்தேவராஜ் (வயது33). பெரவள்ளூரில் உள்ள பூங்காவில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

ஜான்தேவராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு கடன் வாங்க உதவினார். அப்போது அவர் சாட்சி கையெழுத்து போட்டதாக தெரிகிறது. இதற்கிடையே கடன் வாங்கிய நபர் இறந்து விட்டதால் அந்த கடனை மாதம் தோறும் தனது சம்பளத்தில் இருந்து ஜான் தேவராஜ் கொடுத்து அடைத்து வந்தார். மேலும் இதற்காக வேறு நபர்களிடம் கடன் வாங்கியும் நண்பர் வாங்கிய கடனை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் பிரச்சனையில் ஜான்தேவராஜ் சிக்கினார். அவரால் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியவில்லை. அவரிடம் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த ஜான் தேவராஜ் தற்கொலை செய்ய முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத போது வெளியில் சென்று இருந்த தனது மனைவி சுப்புலட்சுமியின் செல்போனுக்கு வீடியோ கால் செய்து பேசினார். அப்போது கடன் தொல்லையால் தற்கொலை செய்யப்போவதாக கூறி பேசியபடியே ஜான் தேவராஜ் தூக்கில் தொங்கினார்.

இதனை கண்டு மனைவி சுப்புலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அவர் விரைந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் ஜான்தேவராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி துடித்தார். இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து கடன் கொடுத்தவர்கள் யாரேனும் மிரட்டினார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News