தமிழ்நாடு செய்திகள்

தஞ்சையில் கார்- மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: சிறுமி உள்பட 4 பேர் பலி

Published On 2025-07-08 13:38 IST   |   Update On 2025-07-08 13:38:00 IST
  • விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெயா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  • சேதமடைந்த 2 வாகனங்களையும் தாலுகா போலீசார் அப்புறப்படுத்தினர்.

தஞ்சாவூா்:

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (வயது 57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் உறவினர்கள் ஸ்டாலின் (36), அவரது மனைவி துர்கா (32), 3 வயது குழந்தை நிலாவேணி சூர்யா ஆகியோருடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக ஒரு காரில் புறப்பட்டார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கும்பகோணத்திற்கு வந்த அவர்கள் அங்குள்ள கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, பின்னர் அதே காரில் தஞ்சை பெரிய கோவிலை பார்ப்பதற்காக புறப்பட்டனர். தஞ்சாவூர் அருகே விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் நாற்று ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்துள்ளது. அந்த மினிலாரியை விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக கார்- மினி லாரி நேருக்கு நேர் மோதின. இதில் 2 வாகனங்களும் பலத்த சேதமடைந்து தூக்கி வீசப்பட்டன. இந்த கோர விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெயா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், காரில் பயணித்த குமார், துர்கா, மோனிஷா, ஸ்டாலின், சிறுமி நிலாவேணி சூர்யா மற்றும் மினி லாரி டிரைவர் விக்னேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

தகவல் அறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குமார், துர்கா, சிறுமி நிலாவேணி சூர்யா ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மோனிஷா, ஸ்டாலின், லாரி டிரைவர் விக்னேஷ் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கோர விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேதமடைந்த 2 வாகனங்களையும் தாலுகா போலீசார் அப்புறப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சைக்கு ஆன்மீக சுற்றுலா வந்தபோது மினி லாரி மோதியதில் சென்னையை சேர்ந்த சிறுமி உள்பட 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News