சென்னையில் அமெரிக்க தூதரகம் - ஏ.வி.எம். ஸ்டுடியோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தினர்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சிறிது நேரத்தில் அது வெடிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
இதற்கிடையே வடபழனி ஏ.வி. மெய்யப்பன் சாலையில் அமைந்துள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக நிர்வாக அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இது பற்றி ஸ்டுடியோ மேலாளர் விஸ்வநாதன் கே.கே. நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தினர். இதிலும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
கடந்த சில நாட்களாகவே சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட 10 தூதரகங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. பல்வேறு அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் தினமும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு கொண்டே இருக்கும் நிலையில் மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக சென்னை மாநகரப் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.