தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2025-02-06 12:53 IST   |   Update On 2025-02-06 12:53:00 IST
  • அலங்காநல்லூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களும் வந்து பள்ளியில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
  • பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து குழந்தைகளை வந்து அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில் பாபாக்குடி பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2035 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்காக நிர்வாகம் சார்பில் பஸ், வேன்கள் இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு இன்று மர்ம நபர் ஒருவர் மெயில் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இந்த தனியார் பள்ளியில் வெடிகுண்டு வீச போவதாக தெரிவித்து இருந்தார். இதைப்பார்த்த பள்ளி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நிர்வாகத்தினருக்கும் தகவல் கூறினர்.

இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஏராளமானோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து அலங்காநல்லூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களும் வந்து பள்ளியில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.

அனைத்து வகுப்பறைகளிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாகவும் சோதனை நடத்தப்பட்டது. அத்துடன் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன்கள், இருசக்கர வாகனங்களிலும் போலீசார் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். இதற்கிடையே பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து குழந்தைகளை வந்து அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதைக்கேட்டு பதட்டம் அடைந்த பெற்றோர்கள் அவசரம் அவசரமாக பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வளாகத்தில் தயாராக இருந்த பிள்ளைகளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே, பள்ளி நிர்வாகம் போக்குவரத்துக்காக எந்த ஒரு ஏற்பாடும் செய்யாமல் அலட்சியமாக இருப்பதாக கூறி பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

Tags:    

Similar News