தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் மழை குளிரால் அதிகரிப்பு- வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள், முதியவர்கள் கடும் பாதிப்பு

Published On 2025-12-01 15:01 IST   |   Update On 2025-12-01 15:01:00 IST
  • சென்னையில் உள்ள சிறு சிறு கிளினிக்குகளில் நள்ளிரவு வரை கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
  • குழந்தைகளுடன் பெற்றோர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

சென்னை:

சென்னையில் பருவமழை சீசனில் ஏற்படக் கூடிய காய்ச்சலால் குழந்தைகள், முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பொதுவாக அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் வரையில் உள்ள காலத்தில் ப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். கை, கால் வலி, உடம்பு வலி, காய்ச்சல், சளி, மூக்கு ஒழுகுவது, இருமல் போன்ற பாதிப்புகளால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் சுவாசப் பாதை தொற்றால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

இதனால் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. சிறு குழந்தைகள் முதல் பள்ளி மாணவ, மாணவிகள் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவருக்கு வரக்கூடிய காய்ச்சல் மற்றவர்களுக்கும் எளிதாக தொற்றி விடுவதால் குடும்பமாக பாதிக்கப்படுகிறார்கள்.

சென்னையில் உள்ள சிறு சிறு கிளினிக்குகளில் நள்ளிரவு வரை கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இது குறித்து அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரி பொதுநல மருத்துவத்து றையின் தலைவர் டாக்டர் சந்திரசேகர் கூறியதாவது:-

தற்போது வருகின்ற காய்ச்சல் இந்த பருவ காலத்தில் வரக்கூடியது. நவம்பர், டிசம்பரில் பெய்யும் மழையாலும், குளிராலும் இந்த பாதிப்பு அதிகரிக்கும். வழக்கமான காய்ச்சல் பாதிப்பை விட 10 முதல் 15 சதவீதம் வரை பாதிப்பு அதிகரிக்கும்.

புளு வைரஸ், அடினோ வைரஸ் போன்றவை இக்காலத்தில் அதிகமாக பாதிக்கும். இத்தகைய காய்ச்சல் பாதிப்பு 95 சதவீதம் தானாகவே சரியாகி விடும்.

சூடான தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். சுய மருத்துவம் பார்க்கக் கூடாது. மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க முகக் கவசம் அணிய வேண்டும். இணை நோய் உள்ள பெரியவர்களுக்கு காய்ச்சலால் மற்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பருவ கால காய்ச்சலால் பயப்பட தேவையில்லை. வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் மிக குறைவான அளவில் வருவதாக டீன் சாந்தராமன் தெரிவித்தார்.

'புளு' காய்ச்சல் பாதிப்பு தான் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகிறது. அதே நேரத்தில் டெங்கு பாதிப்பும் சென்னையில் அதிகரித்து உள்ளது.

Tags:    

Similar News