6 நாட்களுக்கு பின்பு குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
- பெண்கள் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
- சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது. மெயின் அருவி தவிர்த்து புலியருவி, சிற்றருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருந்த தடுப்புகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருந்ததால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திய பின்பு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என நேற்று வரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலையில் மழை பொழிவு முற்றிலும் குறைந்து குற்றாலம் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து பெண்கள் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
6 நாட்கள் தொடர் தடைக்கு பின்பு குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.