குற்றாலம் மெயின் அருவியில் 2 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி- விடுமுறை நாளில் அலைமோதிய கூட்டம்
- அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இன்று வழங்கப்பட்டது.
- பாதுகாப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டன.
இந்த நிலையில், மழை குறைந்ததால் இன்று காலை குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் 2 நாட்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இன்று வழங்கப்பட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் குவிந்தனர்.
குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. பாதுகாப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.