எல்லோரிடமும் இறை உணர்வும் தியாக சிந்தனையும் மலரட்டும் - இ.பி.எஸ். பக்ரீத் வாழ்த்து
- இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவிபுரியுங்கள்.
- நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.
சென்னை:
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து வருமாறு:-
தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் எண்ணத்தை மேலோங்கச் செய்யும் நன்நாளாகவும்; ஏற்றத் தாழ்வுகளை அகற்றி அனைவரும் ஒன்றுகூடி இறைவனின் புகழை நெஞ்சத்தில் நிலைக்கச் செய்து, விருந்தளித்து மகிழ்ச்சியில் திளைக்கும் திருநாளாகவும் கொண்டாடப்படுவதே 'பக்ரீத்' திருநாளாகும்.
இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவிபுரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்; எளியவர்களிடம் கருணை காட்டுங்கள்; சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனிதகுல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழி கோலட்டும் என்று மனதார வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனை வருக்கும், பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஆகியோர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.