வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
- சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
- அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை காணப்படும்.
சென்னை:
வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை காணப்பட்டது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை பகுதியில் 19 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் பகுதியில் தலா 15 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.