நாளை தூத்துக்குடி வருகை தரும் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு
- நாளை இரவு 8 மணியளவில் மாலத்தீவில் இருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார்.
- விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ. 381 கோடியில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தை நாளை (சனிக்கிழமை) இரவு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதேபோல் தூத்துக்குடி துறைமுகம் முதல் ரூ.200 கோடியில் அமைக்கப்பட்டு முடிவுற்ற 6 வழிச்சாலை திட்டப் பணி என மொத்தம் ரூ. 4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக நாளை இரவு 8 மணியளவில் மாலத்தீவில் இருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் ஏற்பாட்டில் பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து செட்டிநாடு கட்டிட கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய பயணிகள் முனையம் போன்ற இடங்களை பார்வையிடுகிறார். பின்னர் விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடியை வரவேற்க மாவட்டம் முழுவதும் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து, 2 ஆயிரம் வாகனங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளனர்.
இதுபோல கன்னியாகுமரி,நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்களும் பிரதமரை காண ஆயிரக்கணக்கில் வருகை தர உள்ளனர். இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொள்வார்கள் என்று நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விழா மேடை முன்பு 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் மட்டுமே இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது, விழா மேடையில் முக்கிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி தூத்துக்குடி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தூத்துக்குடி போலீசார் உள்பட ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.