அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு
- பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர்.
- போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஞானசேகரனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர். அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. அப்போது, ஞானசேகரனுக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஞானசேகரன் சார்பில் ஆஜராக வக்கீல்கள் கோதண்டராமன், ஜெயபிரகாஷ் ஆகியோரை சட்டப்பணி ஆணைக்குழு நியமித்தது.
கடந்த ஏப்ரல் 23-ந்தேதி சாட்சி விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குவதாக நீதிபதி ராஜலட்சுமி கடந்த வாரம் உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிறப்பிக்க உள்ளார்.