அதிகாரிகள் உத்தரவு... CCTV காட்சிகள் பதிவான ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்ற போலீஸ் - திடுக்கிடும் தகவல்கள்
- கோவிலுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் என்பவர் கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
- கோவில் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, போலீசார் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு தான் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நீதிபதி முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
குறிப்பாக மடப்புரம் கோவில் பின்புறம் உள்ள கோசாலை பகுதியில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஐகோர்டிலும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. போலீசார் கம்பியால் அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த தாக்குதலுக்கு பின் தான் அஜித்குமார் இறந்தார் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவம் நடந்த ஜூன் 28-ந்தேதியன்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் என்பவர் கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
அதில் அஜித்குமாரை அறநிலையத்துறை அலுவலகம் பின்புறம் அழைத்துச் செல்வது, உயிரிழந்த பின் கோவில் ஊழியர்கள் கார்த்திக் வேலு, வினோத் ஆகியோர் உதவியுடன் அஜித்குமாரை ஆட்டோவில் ஏற்றுவது போன்றவை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
உயர் அதிகாரியின் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் நேரடியாக வந்து ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றுள்ளார். எனவே அதில் உள்ள பதிவுகள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கோவில் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, போலீசார் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு தான் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் தான் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச்செல்ல உத்தரவிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.