அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளது: எல்.முருகன்
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
- தமிழகத்தை திமுக அரசாங்கம் கடந்த 4 ஆண்டுகளாக சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக தி.மு.க. அரசாங்கம் தமிழக மக்களை படுகுழியில் தள்ளி இருக்கிறார்கள். சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு என மக்களின் தலையின் மீது சுமையை ஏற்றி மக்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத ஆட்சி வரும் தேர்தலில் விரட்டி அடித்து அகற்றப்படும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற பெண் மீது தாக்குதல் நடந்துள்ளது. விசாரணை என்ற பெயரில் 24 பேர் லாக்கப் டெத் என்னும் காவல்நிலைய பாதுகாப்பில் இருந்தபோது மரணம் அடைந்துள்ளனர். சமீபத்தில் நடந்த அஜித்குமாரின் படுகொலை காவல்துறையின் படுகொலையாக பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகவே வாய்க்கு வந்த படி எல்லாம் பேசி முதல்வர் ஸ்டாலின் தடுமாறி உளர ஆரம்பித்துள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை சுற்றியுள்ள தம்பிகளின் ஆட்சி தான் நடக்கிறது.
அவர்கள்தான் ஒவ்வொரு துறையையும் கவனித்துக் கொள்கிறார்கள். டாஸ்மாக், மணல் கொள்ளை, பத்திரப்பதிவு ஊழல், கனிம வள கொள்ளை என தமிழகத்தை திமுக அரசாங்கம் கடந்த 4 ஆண்டுகளாக சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். அதற்காகத்தான் மேட்டுப்பாளையத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரமாண்ட யாத்திரையை தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவராக இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்.
இந்த யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். தி.மு.கவை வீட்டுக்கு அனுப்புகிற யாத்திரையாக இது இருக்கும். இதே போல் இந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாடு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் ஆன்மீக பூமி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இதனை எங்களது தலைவர் அமித்ஷாவே பலமுறை தெரிவித்து விட்டார். நாங்கள் அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
ஆனால் தி.மு.க கூட்டணியில் தான் விரிசல் ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரே தமிழகத்தில் நடைபெறும் லாக்கப் டெத் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து தினந்தோறும் விமர்சித்து வருகின்றன.
தேசிய கல்வி கொள்கையை பொறுத்தவரை அரசியல் காரணத்திற்காக தி.மு.க அரசு அந்த திட்டத்தை ஏற்க மறுத்து மாணவர்களின் கல்வியில் விளையாடி அரசியல் செய்கிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக சமூக நலன் சார்ந்த திட்டங்களான சாலை மேம்பாட்டு, ரெயில் நிலையம் மேம்பாட்டு, ஜல்ஜீவன் மற்றும் விவசாயிகளுக்கு ஆண்டுகளுக்கு 6,000 உதவித்தொகை, 3 கோடி மக்களுக்கு இலவச அரிசி என இதுவரை ரூ.11 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது.
த.வெ.க தலைவர் விஜயின் செயல்பாடுகளை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி யாரோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது, கூட்டணியில் இன்னும் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்பது போகப் போக தெரியும். தேசிய தலைமை தான் இவை அனைத்தையும் அறிவிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.