தமிழ்நாடு செய்திகள்

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

முல்லை பெரியாறு அணையில் மீண்டும் கூடுதல் தண்ணீர் திறப்பு- சுருளி அருவியில் தடை

Published On 2025-07-20 10:19 IST   |   Update On 2025-07-20 10:19:00 IST
  • பெரியாறு அணையில் 23.6, தேக்கடியில் 25.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
  • மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியதால் அணையின் நீர்மட்டம் 136 அடிவரை உயர்ந்தது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து இன்று காலை 129.95 அடியாக உள்ளது. இருந்த போதும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1867 கனஅடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முல்லை பெரியாற்றின் கரை பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 105 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில், மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் மாலையில் மீண்டும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1867 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து 1858 கனஅடியாக அதிகரித்துள்ளது.

பெரியாறு அணையில் 23.6, தேக்கடியில் 25.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப், பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மீண்டும் 4 ஜெனரேட்டர்கள் மூலம் முழு அளவான 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

தொடர் மழை காரணமாக கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் சுருளி அருவிக்கு வந்தனர். ஆனால் தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மற்றும் வருசநாடு பகுதியில் உள்ள மேகமலை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் நீர் வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

Similar News