பிரதமர் மோடி கூறியதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன்- ஓ.பன்னீர்செல்வம்
- அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும்.
- அ.தி.மு.க. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணைவீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சியில் தொடர 4½ ஆண்டுகள் ஒத்துழைப்புதந்தேன். அப்போது பிரதமர் மோடி என்னிடம் நீங்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறவேண்டும் என கூறினார். அதனை ஏற்று நான் துணை முதல்வராக பதவியேற்றேன். 50 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உழைத்து உருவாக்கிய அ.தி.மு.க. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தொண்டர்கள் வேதனையில் உள்ளனர்.
அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும். இதில் எந்த நிபந்தனையும் இல்லை என ஏற்கனவே கூறியுள்ளேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா ஒன்றிணைந்து அ.தி.மு.க.வை காப்பாற்றும். அவர்கள் வரிசையில் நானும் முதலமைச்சராக இருந்துள்ளேன். எனவே தொடர்ந்து வெற்றிக்காக பாடுபடுவேன் என பேசினார்.