அந்தியூர் குருநாத சுவாமி கோவில் திருவிழா: 6 குதிரைகள் அடுத்தடுத்து இறந்ததால் பரபரப்பு
- திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது.
- பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும் 13-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக அந்தியூர் பகுதியில் கோவில், கடைகள், கேளிக்கை அரங்குகள், குதிரை மற்றும் மாட்டு சந்தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது. குறிப்பாக இசைக்கு ஏற்ப நடமாடும் குதிரை உலக புகழ் பெற்றது. சந்தைக்கு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சைஜா என்பவர் 24 குதிரைகளை சந்தைக்கு கொண்டு வந்தார். குதிரையின் பாதுகாவலராக பைரஸ் என்பவர் இருந்தார். நேற்று இரவு குதிரைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்து வாளியின் மூலம் தண்ணீர் கொண்டு வைத்தார். வாளியில் யூரியா இருந்துள்ளதை கவனிக்காமல் தண்ணீர் எடுத்து வைத்ததில் 6 குதிரைகள் தண்ணீரை குடித்துள்ளது. யூரியா தண்ணீரை குடித்த 6 குதிரைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்து இறந்தன. மற்ற குதிரைகள் வேறு வாளியில் இருந்த தண்ணீரை குடித்ததால் உயிர் தப்பியது.
திருவிழாவை முன்னிட்டு சந்தையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட குதிரைகளில் 6 குதிரைகள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.