மதுரையில் குவிந்த முருக பக்தர்கள்- கந்த சஷ்டி பாடி கின்னஸ் சாதனை படைக்கிறார்கள்
- மாநாடு வளாகத்திற்கு பொதுமக்கள் செல்ல இரு நுழைவு வாயில்களும், வி.ஐ.பி., வாகனங்கள் செல்ல ஒரு நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
- பாதயாத்திரை பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் பஜனை பாடியவாறும், சஷ்டி கவசம் கோஷமாக படித்தும் மாநாட்டு திடலில் திரண்டனர்.
மதுரை:
உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வேல் யாத்திரை, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் மலை மீதான சர்ச்சைக்கு பிறகு தமிழ்க்கடவுள் முருகனுக்கு முக்கியத்துவம் அளித்தும், இந்துக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் இன்று முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டாக நடைபெறுகிறது. குன்றம் காக்க, கோவிலை காக்க என்ற தலைப்பில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு கடந்த மாதம் 28-ந்தேதி கால்கோள் விழாவுடன் மாநாட்டு பணிகள் தொடங்கின.
இதையடுத்து கடந்த 8-ந்தேதி மதுரை வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மாநாட்டிற்காக மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில் 8 லட்சம் சதுரஅடி பரப்பளவுள்ள இடத்தில் பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது. அதில் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள் கண்காட்சி கடந்த 16-ந்தேதி தொடங்கியது.
ஒரே இடத்தில் பக்தர்கள் அறுபடை வீடுகளையும் காணும் வகையில் முகப்பு தோற்றம், கோபுரங்கள், பிரகாரங்கள் மற்றும் மூலவர் சன்னதியில் கோவிலில் இருப்பதை போன்று முருகன் சிலை வேலுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதனை காண மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் பூஜை பொருட்களுடன் கோவிலுக்கு வருவதை போன்று வந்து அறுபடை முருகனை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களுக்கு முந்திரி, வேர்க்கடலை உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
மாநாட்டை பிரபலப்படுத்தும் வகையில் புதுச்சேரி மந்திரி நமச்சிவாயம், கவர்னர்கள் ஆர்.என்.ரவி (தமிழ்நாடு), கைலாஷ்நாதன் (புதுச்சேரி), சி.பி.ராதாகிருஷ்ணன் (மகாராஷ்டிரா), த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி உள்ளிட்டோர் வந்து தரிசனம் செய்தனர். அதன் மூலம் அறுபடை வீடுகள் கண்காட்சியை கடந்த 6 நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. மாநாடு நடைபெறும் பாண்டி கோவில் அம்மா திடலில் முருகனின் பிரமாண்ட தோற்றத்துடன் நுழைவு வாயில், திருப்பரங்குன்றம் மலையையும், வேல் ஏந்தியவாறு முருகப்பெருமான் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது போலவும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பில் 5 லட்சம் பக்தர்கள் அமரும் வகையில் தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் அமர 1 லட்சம் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 2 நாட்களாகவே வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்காணக்கானோர் மதுரை வந்து சேர்ந்தனர். அவர்கள் மதுரையில் பல்வேறு விடுதிகளில் தங்கி மதுரையை சுற்றியுள்ள கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர். இன்று காலை மாநாட்டு திடலில் பக்தர்கள் குவிந்தனர். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்ததின் பேரில் முருக பக்தர்கள் மட்டுமின்றி சாய் பாபா பக்தர்கள், ஓம்சக்தி வழிபாட்டு குழுவினர், ஐயப்ப பக்தர்கள் உள்ளிட் டோர் தங்கள் குடும்பத்துடன் மாநாட்டுக்கு வருகை தந்தனர். இதன் மூலம் 5 பக்தர்கள் மாநாட்டுக்கு வருகை தந்தனர்.
குறிப்பாக முருக பக்தர்கள் ஏராளமானோர் மாநாட்டு கால்கோள் விழா நடந்த நாளில் இருந்து விரதம் மேற்கொண்டு இதில் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், மஞ்சள் ஆடை, மாலை அணிந்து ஆண், பெண் பக்தர்கள் கையில் வேல் ஏந்தியும், பால் குடங்களை தலையில் சுமந்தும் மாநாட்டுக்கு ஊர்வலமாக வந்தனர். அதேபோல் பாதயாத்திரை பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் பஜனை பாடியவாறும், சஷ்டி கவசம் கோஷமாக படித்தும் மாநாட்டு திடலில் திரண்டனர்.
அனைத்து பக்தர்களும் பிற்பகல் 3 மணிக்குள் மாநாட்டு திடலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பக்தி கோஷங்கள் முழங்கவும், முருகன் திருப்புகழ் பாடியும் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு தமிழர்களின் பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்கான சிறிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிறப்புரையாற்றுகிறார்கள்.
மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக மாநாட்டு வளாகம் முழுவதும் 18 பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த திரையில் கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் வரும் வகையிலும், அதனை பார்த்தும், பக்தர்களுக்கு வழங்கப்படும் கையடக்க சஷ்டி கவசம் புத்தகம் வாயிலாகவும் படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது உலகளவில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக பதிவு செய்யப்படுகிறது. இதில் நேரில் கலந்துகொள்ள இயலாதவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாலை 7 மணிக்கு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், தீவிர முருக பக்தருமான பவன்கல்யாண் சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அவர் ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
மாநாட்டில் இரவு 7.30 மணிக்கு தமிழகத்தில் உள்ள அறுபடை முருகன் உள்ளிட்ட கோவில்களை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்துவது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முருகன் மாநாடுகளை நடத்துவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெறுகிறது.
முன்னதாக மாநாட்டுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், பாஸ் பெற அவசியம் இல்லை என்று கோர்ட்டு உத்தரவிட்டதால் வெளியூர்களில் இருந்து மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப வாகனங்களை பார்க்கிங் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வண்டியூர் டோல்கேட் அருகே பிரதான சாலையில் மாநாடு வளாகம் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநாட்டிற்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாநாடு வளாகத்திற்கு பொதுமக்கள் செல்ல இரு நுழைவு வாயில்களும், வி.ஐ.பி., வாகனங்கள் செல்ல ஒரு நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை ஒருங்கிணைக்கவும், பக்தர்களை வழிநடத்தவும் மாநாடு நடைபெறும் பகுதியில் மட்டும் 300 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்கள் பிரித்து விடப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகள் மாநாட்டு திடலுக்குள் சிரமமின்றி செல்ல சக்கர நாற்காலிகளும், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுாட்ட தனி அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில், 1,000 லிட்டர் தண்ணீர் டேங்குகள், தற்காலிக தண்ணீர் பந்தல்கள், 200 கழிப்பறைகள் அமைக்கட்டுள்ளன.
மாநாட்டையொட்டி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் ஐந்து துணை கமிஷனர்கள், 15 உதவி கமிஷனர்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.