காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள்
- குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
இலங்கை கடலோர பகுதி அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து, நேற்று காலை 8.30 மணியளவில் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவியது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.