தமிழ்நாடு செய்திகள்

கடந்த மாதத்தில் கோவை விமான நிலையத்தில் இருந்து 2.80 லட்சம் பேர் பயணம்

Published On 2025-03-29 10:21 IST   |   Update On 2025-03-29 10:21:00 IST
  • சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர்.
  • தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருகிறது.

கோவை:

கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 30 விமானங்கள் சேவை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் விமான இயக்கங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற விமான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி கோவை விமான நிலையத்தில் இருந்து பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 179 சர்வதேச விமானங்களும், 1,651 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 1,830 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

இது கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 21.43 சதவீதம் அதிகமாகும்.

சர்வதேச விமானங்களில் 23 ஆயிரத்து 641 பயணிகளும், உள்நாட்டு விமானங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 37 பயணிகளும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 678 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 31.23 சதவீதம் கூடுதலாகும்.

இதேபோல சர்வதேச விமானங்களில் 180.1 மெட்ரிக் டன் சரக்குகளும், உள்நாட்டு விமானங்களில் 764.7 மெட்ரிக் டன் சரக்குகளும் என மொத்தம் 944.8 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.52 சதவீதம் அதிகமாகும்.

தமிழ்நாட்டில் அதிக பயணிகளை கையாளும் 2-வது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருந்து வருவதாகவும், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விமான நிலைய முனையத்தை விரைவாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News