தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் 2 புயல் சின்னம் - தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு

Published On 2025-11-24 14:48 IST   |   Update On 2025-11-24 14:48:00 IST
  • தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
  • தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கும்.

அந்த வகையில் கடந்த மாதம் சென்னையில் நல்ல மழை பெய்தது. ஆனால் இந்த மாதம் வடகிழக்கு பருவமழை சென்னையில் ஏமாற்றம் அளிக்கும் வகை யிலேயே இருந்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது, அடுத்தடுத்த நாட்களில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான புயலும் சென்னையில் பெரிய அளவில் மழை தாக்கத்தை ஏற்படுத்தாமல் ஆந்திரா நோக்கி சென்று வங்கக்கடலில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. பின்னர் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

கொமோரின் மற்றும் அதை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கைப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி இன்று காலை 5.30 மணிக்கு அதே பகுதியில் நிலை கொண்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை பகுதியில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நாளை வரையில் நீடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்தர் கூறும்போது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு கன முதல் மிக கனமழை பதிவாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.

மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகள், கடலோரத்தின் ஓரிரு இடங்களிலும் அதிகனமழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல் தேனி மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம்.

வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையையும் எதிர்ப்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக 4-ம் சுற்று வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளது' என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் கனமழை கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் கன மழை கொட்டியது. தூத்துக் குடி அரசு மருத்துவமனை, ரெயில் நிலையம், பழைய மாநகராட்சி உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரெயில் வழித்தடத்தில் மழைநீர் தேங்கியதால் 3 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி வ.உ.சி. சந்தை பகுதி வி.இ. ரோடு சாலையில் பெருமளவு தண்ணீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.

தூத்துக்குடி சிப்காட், சண்முகபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இந்த பகுதியில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளான ஜீவா நகர், ராஜ் கண்ணா நகர், குமாரபுரம், வீரபாண்டிய பட்டனம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

மழை நீரை வெளியேற்ற முடியாத நிலையில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

Tags:    

Similar News