11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை- ஆசிரியர் கைது
- பள்ளி வகுப்பறையில் சக மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
- இதனை தவறாகப் புரிந்துகொண்ட ஆசிரியர் சிம்காஸ், என்னை பல மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளில் பேசினார்.
தஞ்சாவூரில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் சக மாணவியுடன் பேசியதை ஆசிரியர் கண்டித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாகச் சொல்லப்படும் நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு அந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் ஒரே மகன் ஸ்ரீராம், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், காலை வீட்டின் அறையில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணத்தை அவர் கடித்ததில் எழுதியுள்ளார். அதில், பள்ளி வகுப்பறையில் சக மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இதை பார்த்த 11ம் வகுப்பு ஆசிரியர் சிம்காஸ் என்பவர் தவறாகப் புரிந்துகொண்டு என்னை பல மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளில் பேசினார். அதனால் தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என ஸ்ரீராம் தன் கைப்பட அதில் எழுதியுள்ளார்.
இதன்காரணமாக தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.