கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது
- ஜெயகிருஷ்ணனின் பழக்க வழக்கங்கள் பிடிக்காததால் மாணவி அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.
- மாணவியின் பெற்றோர் ஜெயகிருஷ்ணனின் பெற்றோரிடம் கூறி கண்டித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 22).
இவர் நெல்லையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த நிலையில், மேற்கொண்டு படிப்பை தொடராமல் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று வந்தார்.
இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி திரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயகிருஷ்ணனின் பழக்க வழக்கங்கள் பிடிக்காததால் அந்த மாணவி அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் தன்னுடன் பேசுமாறு ஜெயகிருஷ்ணன் அந்த பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார்.
அதற்கு அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த ஜெயகிருஷ்ணன் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் ஜெயகிருஷ்ணனின் பெற்றோரிடம் கூறி கண்டித்துள்ளனர். அதற்கு அந்த வாலிபரின் பெற்றோரான வெற்றிவேல், கவிதா ஆகியோர் சேர்ந்து இளம்பெண்ணின் பெற்றோரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கூடங்குளம் போலீசில் அளித்த புகாரின் பேரில் ஜெயகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜெயகிருஷ்ணனின் பெற்றோர் வெற்றிவேல்-கவிதா மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.