நீங்கள்தான் நாங்கள் தேர்வு செய்திருக்கும் அதிர்ஷ்டசாலி- மயக்கும் குரலை நம்பி ரூ.12 லட்சத்தை இழந்த இளம்பெண்
- ஒருகட்டத்தில் பரிசுத் தொகையும், பரிசுப் பொருட்களும் வராமல் போகவே, தான் ஏமாந்தது தெரிய வந்தது.
- மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
'ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவரது ஆசையை தூண்ட வேண்டும்...'
இது இயக்குனர் வினோத் இயக்கி, நடராஜ் நடித்து வெளியான திரைப்படத்தில் வெளியான ஒரு வசனம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு பஞ்சம் இருக்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையிலான மோசடிகளும், சம்பவங்களும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகிக்கொண்டே செல்கிறது.
காவல் துறையில் எத்தனையோ பிரிவுகள் இருந்தாலும், தற்போது முழு செயல்பாட்டில் எப்போதும் பிஸியாக இருப்பது சைபர் கிரைம் போலீசார்தான். அந்த அளவுக்கு ஒயிட் காலர் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துவிட்டன.
அரசு வேலை வாங்கி தருகிறேன், நான் வங்கி மேலாளர் பேசுகிறேன், உங்களுக்கு மிகப்பெரிய பரிசு விழுந்திருக்கிறது, நீங்கள்தான் நாங்கள் தேடும் அதிர்ஷ்டசாலி... என்று பேசத்தொடங்கும் மோசடிக்காரர்களிடம் சிக்கிக்கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களை மயக்கி உங்களிடம் இருக்கும் பணத்தை அபகரித்துவிடுவார்கள் என்று சைபர் கிரைம் போலீசாரும் தொடர்ந்து எச்சரித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தியபோதும், மெத்தப் படித்தவர்களே இதில் அதிகம் மாட்டிக்கொள்கிறார்கள். அவ்வாறு சிக்கியவர்களில் டாக்டர்களும், என்ஜினீயர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் அரியலூரை சேர்ந்த அபலைப்பெண் ஒருவர் ரூ.12 லட்சத்தை இழந்துள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:-
அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தாய் ஜெயந்தி, தந்தை செல்வராஜ். செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர்களால் புற்றுநோய்க்கு மிகப்பெரிய மருத்துவம் பார்க்க தொகையின்றி தற்போது வீட்டில் வைத்தே மருந்து, மாத்திரைகளை வாங்கி கொடுத்து கவனித்து வருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜெயந்தியின் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் ஆங்கிலத்தில் ஒரு இளம்பெண் குரல் ஒலித்தது. ஏதோ தவறான அழைப்பாக இருக்கும் என்று எண்ணிய ஜெயந்தி அதனை தவிர்த்துவிட்டார்.
ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த அழைப்பால் தனது மகனின் உதவியுடன் அந்த அழைப்பை ஏற்று பேசிய ஜெயந்திக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து நாட்டில் இருந்து பேசுகிறேன் என்று தன்னை அறிமுகப்படுத்திய அந்த பெண், தன்னுடைய மகள் பிறந்தநாளை முன்னிட்டு உங்களுக்கு பரிசு தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்க விரும்புகிறோம். அந்த அதிர்ஷ்டசாலியாக நீங்கள் தேர்வாகி உள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த பரிசுத் தொகையும், பரிசு பொருட்களும் தற்போது விமான நிலையத்தில் உள்ளது எனவும், அதனை பெற ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். அதற்காக முதலில் ரூ.35 ஆயிரம் வேண்டும் எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் பரிசுத்தொகை என்பதால் பல லட்சங்கள் இருக்கும், தங்கள் குடும்ப பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும், தனது கணவரையும் புற்றுநோயில் இருந்து காப்பாற்றி விடலாம் என்று கணக்கு போட்ட ஜெயந்தி தனது மகன் உதவியுடன் ரூ.35 ஆயிரத்தை வங்கியில் செலுத்தியுள்ளார்.
பின்னர் அவர்கள் வருமான வரி, சுங்கக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி 1 லட்சம், 2 லட்சம் என கொஞ்சம் கொஞ்சமாக ரூ.12 லட்சம் கறந்துள்ளனர். ஆனாலும் பரிசுத்தொகையோ, பரிசு பொருட்களோ வந்தபாடில்லை. இதற்கு மேல் கடன் வாங்க கூட வழியில்லை என்ற நிலைக்கு ஜெயந்தி வந்தார்.
அக்கம், பக்கத்தினர், உற்றார், உறவினர்கள் என கடன் வாங்காத ஆளே இல்லை. அப்போதுதான் ஆரம்பத்திலேயே உதிக்க வேண்டிய சிந்தனை தற்போது ஜெயந்திக்கு உதித்தது. ஒருவேளை இது ஏமாற்று வேலையாக இருக்குமோ என்று எண்ணினார்.
ஒருகட்டத்தில் பரிசுத் தொகையும், பரிசுப் பொருட்களும் வராமல் போகவே, தான் ஏமாந்தது தெரிய வந்தது. இழந்தது போதும், இனியாவது விழித்துக்கொள்வோம் என்று கருதிய ஜெயந்தியும், அவரது மகன் விமல்ராஜூம் நடந்தது குறித்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்தை இழந்து பரிதவித்து வரும் ஜெயந்தி இந்த மோசடி பற்றி கூறுகையில், வெளிநாட்டிலிருந்து கூரியர் வந்திருக்குன்னு சொல்லி முதலில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதன்படி முதல் கட்டமாக வரி செலுத்த ரூ.35 ஆயிரம் அனுப்புமாறு கூறினார்கள். அப்படியே படிப்படியா ரூ.12 லட்சத்து 35 ஆயிரம் அனுப்பினோம். எல்லாம் கிடைக்கும்ங்குற நம்பிக்கையில் அக்கம் பக்கத்துல கடன் வாங்கித் தான் கொடுத்தோம் என்றார்.