தமிழ்நாடு செய்திகள்

மலைப்பாதையில் கர்ப்பிணி சிவகாமி நடந்து சென்ற காட்சி

மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியுடன் 15 கி.மீ. ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்ற கர்ப்பிணி

Published On 2023-07-01 09:27 IST   |   Update On 2023-07-01 09:27:00 IST
  • சிவகாமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
  • டோலி கட்டி தூக்கி செல்ல சிவகாமி மறுத்தார்.

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லை. கர்ப்பிணி, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மலையில் இருந்து டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கர்ப்பிணி ஒருவர் மலையில் இருந்து நடந்தே ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தை பெற்று ஆபத்திலிருந்து தப்பியுள்ளார்.

அணைக்கட்டு அருகே உள்ள ஜார்த்தான்கொல்லை ஊராட்சி, முத்தன் குடிசை மலை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது26), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி (22). தம்பதியினருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

சிவகாமி மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உறவினர்கள் சிவகாமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

போதுமான சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் மூலம் அவரை அழைத்துச் செல்ல முடியாத சூழல் நிலவியது. டோலி கட்டி தூக்கி செல்ல சிவகாமி மறுத்தார்.

முத்தன்குடிசை கிராமத்தில் இருந்து ஆஸ்பத்திரி செல்ல வேண்டுமென்றால் சுமார் 30 கிலோமீட்டர் உள்ள ஒடுகத்தூர், 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நம்மியம்பட்டு அல்லது 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுக்கம்பாறைக்கு தான் செல்ல வேண்டும்.

என்ன செய்வது என தெரியாமல் திணறிய நேரத்தில், சிவகாமியை முத்தன் குடிசை கிராமத்தில் இருந்து நடைபயணமாக ஆஸ்பத்திரி செல்ல அழைத்து வந்தனர்.

கர்ப்பிணி பெண் பிரசவ வலியோடு நடந்தார். தெள்ளை மலை கிராமம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே கணியம்பாடி அடுத்த துத்திக்காட்டிற்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்து சிவகாமியை அவரது உறவினர்கள், ஆட்டோ மூலம் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதிர்ஷ்டவசமாக தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

சாலை வசதி மட்டும் இருந்திருந்தால் இது போன்ற ஆபத்தான சூழல் உருவாகி இருக்காது.

எங்களது நீண்ட கால சிரமத்தை போக்கும் வகையில் சாலை வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News