வீட்டில் தூங்கிகொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை: கணவரிடம் போலீஸ் விசாரணை
- கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுப்பம்மாள் பிணமாக கிடந்ததை பா ர்த்து அதிர்ச்சியடைந்து கதறினார்.
- வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நவரத்தினாநகரை சேர்ந்தவர் பிரம்மன்(வயது 50 ). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுப்பம்மாள் (47).
இவர்களுக்கு பாண்டி (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனது சொந்த வேலையாக மகள் வெளியூர் சென்றிருந்தார். பாண்டி வேலைக்கு சென்று விட்டார். சுப்பம்மாள் வீட்டிற்குள்ளும், பிரம்மன் வீட்டின் வெளியேயும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பணி முடித்து வீட்டிற்கு பாண்டி வந்தார். அப்போது கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுப்பம்மாள் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார்.
இவரது சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் சுப்பம்மாவை கொலை செய்தது யார்? என்பது குறித்து கணவர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.