தமிழ்நாடு

கோவில் இணை ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

பெண் வியாபாரியை தாக்கியதாக புகார்: பழனி கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன் முற்றுகை

Published On 2022-12-14 08:54 GMT   |   Update On 2022-12-14 08:54 GMT
  • வியாபாரிகள் அனைவரும் இணை ஆணையர் லட்சுமியை முற்றுகையிட்டனர்.
  • சாலையோர வியாபாரி பூவாயி என்பவரை இணை ஆணையர் தாக்கியதாக கூறப்போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை சமரசம் செய்ய முயன்றும் கேட்கவில்லை.

பழனி:

பழனி கோவிலுக்கு தற்போது சபரிமலை சீசனாக இருப்பதால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு இடையூறாக அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரக் கடைகள் அதிக அளவில் முளைத்து வருகின்றன.

அவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை மிரட்டி பல்வேறு பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கடை வைத்திருப்பவர்களை கோவில் நிர்வாகம் சார்பில் அகற்றி அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றபோது கோவில் இணை ஆணையர் லட்சுமி பார்வையிட்டார். அவரிடம் ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் வியாபாரிகள் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சாலையோர வியாபாரி பூவாயி என்பவரை இணை ஆணையர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் வியாபாரிகள் அனைவரும் இணை ஆணையர் லட்சுமியை முற்றுகையிட்டனர். அவரை போலீசார் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இணை ஆணையர் தனது அலுவலகத்திற்கு வந்துவிட்ட போதிலும் வியாபாரிகள் அவரை பின்தொடர்ந்து வந்து அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவரிடம் கேட்டபோது தான் யாரையும் தாக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். இருந்தபோதிலும் பூவாயி என்பவர் கூறுகையில், தனது கழுத்தில் அணிந்திருந்த கயிரை பிடித்து இழுத்து இணை ஆணையர் கன்னத்தில் அறைந்ததாக கூறினார். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை சமரசம் செய்ய முயன்றும் கேட்கவில்லை.

இதனால் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News