தமிழ்நாடு

தங்க நகை எனக்கூறி கவரிங் நகையை விற்க முயன்ற பெண் உள்பட 3 பேர் கைது

Published On 2023-08-18 07:04 GMT   |   Update On 2023-08-18 07:04 GMT
  • நகையை பரிசோதித்து பார்த்தபோது அது கவரிங் நகை என்று தெரியவந்தது.
  • தங்க நகை எனக்கூறி கவரிங் நகையை விற்க முயன்ற 3 பேர் பிடிபட்ட சம்பவம் சூளகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் நாரூரான் (வயது29). இவர் சூளகிரி பஸ் நிறுத்தம் அருகே கமிஷனுக்காக பணபரிவர்த்தனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த5-ந் தேதி நாரூரான் கடையில் இருந்தபோது பெண் உள்பட 3 பேர் வந்தனர்.

அப்போது தங்களிடம் அரை பவுன் தங்க நகை உள்ளது என்றும், அதனை அடமானமாக வைத்துக் கொண்டு பணம் தருவீர்களா? என்று கேட்டனர். இதனை நம்பிய அவர் அந்த நகையை வாங்கி கொண்டு அவர்களுக்கு ரூ.2500-யை கொடுத்துள்ளார்.

அவர்கள் சென்றபிறகு அந்த நகையை பரிசோதித்து பார்த்தபோது அது கவரிங் நகை என்று தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் செய்வதறியாது திணறினார்.

இந்த நிலையில் அதே 3 பேர் மீண்டும் நேற்று நாரூரான் கடைக்கு வந்துள்ளனர். அப்போது தங்களிடம் 1900 கிராம் தங்க நகைகள் உள்ளதாகவும், அதனை எடுத்துக்கொண்டு பணம் தருமாறு கேட்டுள்ளனர்.

இதனை கேட்ட நாரூரான் மர்ம நபர்கள் தன்னை அவர்கள் ஏமாற்றிய விவரம் ஏதும் அறியாதவர்போல் நடித்து அந்த நகைகளை பெற்றுக்கொள்வதாகவும், அதற்குண்டான பணம் தன்னிடம் இல்லை என்றும், சிறிது நேரத்தில் நண்பர்கள் எடுத்து கொண்டு வந்து விடுவார்கள் என்று கூறி 3 பேரையும் கடையில் அமர வைத்துள்ளார்.

இதனை நம்பிய அந்த 3 பேரும் கடையில் இருந்தனர். அதற்குள் நாரூரான் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல்களை தெரிவித்தார். அவர்கள் உடனே சூளகிரி போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த கிஷோர் (25), ராஜூ (35), மீனா (30) ஆகிய 3 பேர், தங்க நகை விற்பது போல் நடித்து கவரிங் நகையை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பெண் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தங்க நகை எனக்கூறி கவரிங் நகையை விற்க முயன்ற 3 பேர் பிடிபட்ட சம்பவம் சூளகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News