தமிழ்நாடு

நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக பெய்தது: கடம்பூர், கழுகுமலையில் 4 சென்டி மீட்டர் மழை பதிவு

Published On 2024-02-02 07:50 GMT   |   Update On 2024-02-02 07:50 GMT
  • எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
  • ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 3 மாவட்டங்களிலும் இன்று காலை வரையிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

நெல்லை, பாளை ஆகிய இடங்களில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லையில் 13 மில்லி மீட்டர் பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்தது .

118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது 116 அடி நீர் இருப்பு உள்ளது. பிரதான பாபநாசம் அணையில் 135 அடி நீர் இருப்பு இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 148 அடியாக உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஆரம்ப கட்ட நிலையிலேயே விவசாயிகள் நல் நடவு செய்தனர். இதன் காரணமாக அவை கதிர் உண்டாகும் நிலையில் உள்ளது. அவை இன்னும் ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை நேற்று அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. மாலை முதல் இரவு வரையிலும் கயத்தாறு மற்றும் கழுகு மலை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழையும் பெய்தது. அதிகபட்சமாக கடம்பூரில் 44 மில்லி மீட்டரும், கழுகு மலையில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

இதேபோல் திருச்செந்தூர், சாத்தான் குளம் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்தது. கோவில்பட்டியில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை சிவகிரி பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Tags:    

Similar News