தமிழ்நாடு செய்திகள்

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?- ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை

Published On 2023-02-23 10:58 IST   |   Update On 2023-02-23 10:58:00 IST
  • நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் தொண்டர்கள் தன்பக்கம் எப்போதும் இருப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
  • திண்டுக்கல்லில் நடக்க இருந்த ஆதரவாளர்கள் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

பெரியகுளம்:

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் முடிவு குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

நேற்று தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போதும் நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் தொண்டர்கள் தன்பக்கம் எப்போதும் இருப்பார்கள். தீர்ப்பு பாதகமாக வந்தால் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொண்டர்கள் சோர்ந்துவிடக்கூடாது என உற்சாகப்படுத்தினார்.

திண்டுக்கல்லில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் திருமணம் விவேகானந்தா நகரில் நடைபெறுகிறது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் வருகை தர இருந்தார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் அவரது ஆதரவாளர்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென திருமண நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துவிட்டார்.

தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், இதனால் வேறு ஒரு நாளில் மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார். இதேபோல் திண்டுக்கல்லில் நடக்க இருந்த ஆதரவாளர்கள் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

Tags:    

Similar News