மேட்டூர் அணை 16 கண் பாலம் வழியாக உபரிநீர் திறப்பு நிறுத்தம்
- தண்ணீர் திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது.
சேலம்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு மேட்டூர் அணையும் கடந்த மாதம் 30-ந் தேதி 120 அடியை எட்டியது.
கர்நாடக அணைகள் நிரம்பியதால் அதிகபட்சமாக உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் 2 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து அந்த தண்ணீர் உபரி நீராக 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டது. கடந்த 30-ந் தேதி இரவு முதல் இன்று காலை 6 மணி வரை 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 13 ஆயிரத்து 734 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6665 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 124.18 அடியாக உள்ளது.
இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 359 ஆகனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2729 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 83.46 அடியாக இருந்தது. இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 9394 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த உபரிநீர் இன்று காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. ஆனால் பவர் ஹவுஸ் வழியாக வினாடிக்கு தொடர்நது 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.