தமிழ்நாடு

கைலாசபுரம் பெருமாள் கோவில் கல் மண்டபத்தை தொட்டபடி இன்று தண்ணீர் சென்ற காட்சி.

கனமழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2024-01-09 06:24 GMT   |   Update On 2024-01-09 06:24 GMT
  • தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
  • தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருருப்பதாவது:-

கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழையாலும், தாமிரபரணி ஆற்றில் அதிகபடியான மழைநீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாற்று ஓடை கரையோர பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News