தமிழ்நாடு செய்திகள்

நீர்வரத்து குறைந்ததால் 69 அடிக்கு கீழ் சரிந்த வைகை அணை நீர்மட்டம்

Published On 2022-11-22 10:12 IST   |   Update On 2022-11-22 10:12:00 IST
  • இன்று காலை நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 68.83 அடியாக உள்ளது.
  • தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்த்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவே நிலவி வருகிறது.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது.

அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு மேல் சென்றபோது தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. சுமார் 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் அதன்பிறகு மழை நின்றதால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்த்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவே நிலவி வருகிறது.

இன்று காலை நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 68.83 அடியாக உள்ளது. வரத்து 682 கன அடி. திறப்பு 1819 கன அடி. இருப்பு 5529 மி.கன அடி. இதேபோல் முல்லைப்பெரியாறு அணைக்கும் நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. வரத்து 522 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 6698 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 100 கன அடி.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.35 அடி. வரத்து 42 கன அடி. இந்த 2 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News