தமிழ்நாடு செய்திகள்

அவங்க கைல ஸ்கூல் போக போகுது... சாதி ரீதியாக பேசிய ஆடியோ வைரல்: ஆசிரியைகள் சஸ்பெண்ட்

Published On 2022-06-17 16:51 IST   |   Update On 2022-06-17 16:51:00 IST
  • உதவி தலைமை ஆசிரியை சாதி குறித்து பேசியபோது ‘எல்லாருமே சமம்தானே டீச்சர்’ என மாணவர் பதிலளிக்கிறார்.
  • அவர்களின் கைகளில் பள்ளி நிர்வாகம் போனால் உங்க ஊர் பிள்ளைகளுக்கு சீட் கொடுக்கமாட்டார்கள்

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரசுப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை, மாணவர் ஒருவரிடம் சாதி ரீதியாக பேசிய ஆடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குளத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக, உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, செல்போனில் மாணவர் ஒருவரிடம் செல்போனில் பேசி உள்ளார்.

அப்போது, அந்த மாணவரின் சாதி குறித்து கேட்பது மட்டுமின்றி, பள்ளியில் சில ஆசிரியர்களின் பெயரைச் சொல்லி அவர்களை எல்லாம் உனக்குப் பிடிக்குமா? என்று கேட்கிறார் ஆசிரியை கலைச்செல்வி. அதற்கு அந்த மாணவர், அவர்களை பிடிக்கும் என்று சொல்கிறார்.

நான் இந்த ஜாதி, நீ இந்த ஜாதி, அவர்கள் அந்த ஜாதி (தாழ்த்தப்பட்ட ஜாதி). அவர்களின் கையில் இப்போது பள்ளி நிர்வாகம் போகப்போகிறது. அப்படி செல்வதற்கு நாம் விடலாமா? என்று ஆசிரியை கேட்க, 'எல்லாருமே சமம்தானே டீச்சர்' என மாணவர் நறுக்கென பதிலளிக்கிறார்.

அவர்களின் கைகளில் பள்ளி நிர்வாகம் போனால் உங்க ஊர் பிள்ளைகளுக்கு சீட் கொடுக்கமாட்டார்கள், பரவாயில்லையா? என ஆசிரியை கலைச்செல்வி கேட்கிறார். இவ்வாறு உரையாடல் தொடர்கிறது.

தொடர்ந்து பேசும் ஆசிரியை, அந்த மாணவரின் ஊரைச் சேர்ந்தவர்களை பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், இது தொடர்பாக ஊரில் உள்ளவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இதுபற்றி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தினார். அதன்பின்னர் உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, அவருக்கு உதவியாக இருந்த கணினி ஆசிரியை மீனா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News