தமிழ்நாடு

சென்னைக்குள் வர கண்டெய்னர் லாரிகளுக்கு 3 நாட்கள் தடை

Published On 2023-11-02 07:15 GMT   |   Update On 2023-11-02 07:15 GMT
  • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • சென்னைக்குள் வெளியூர் வாகனங்கள் வரும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளில், இந்த தடை அமலில் இருக்கும்.

சென்னை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து அதிகமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

இவர்களின் தேவையை கருத்தில் கொண்டு கோயம்பேடு பஸ் நிலையம் மட்டுமல்லாது, கே.கே. நகர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு அதிக எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நிலையில் சாலைகளில் நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள, சம்பந்தப்பட்ட துறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நவ. 9, 10, 11 ஆகிய நாட்களில், மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை, சென்னைக்குள் கண்டெய்னர் லாரிகளை இயக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னைக்குள் வெளியூர் வாகனங்கள் வரும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளில், இந்த தடை அமலில் இருக்கும்.

இந்த சமயத்தில் நகருக்கு வெளியில் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி, கண்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைப்பதற்கான தற்காலிக இடங்களை ஒதுக்க காவல் துறை, நெடுஞ்சாலை துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News