தமிழ்நாடு

பஸ்சின் அடியில் சிக்கி இன்று காலை பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடல் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட காட்சி.

மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

Published On 2023-10-01 05:19 GMT   |   Update On 2023-10-01 05:19 GMT
  • விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பஸ் சரியாக பராமரிக்கப்பட்டு உள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அருவங்காடு:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து பற்றிய உருக்கமான தகவல்கள் வருமாறு:-

தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 59 பேர் கேரளா, நீலகிரி, கோவை மருதமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

அதன்படி, கடந்த 28-ந் தேதி கடையத்தில் இருந்து 59 பேரும் சுற்றுலா பஸ்சில் சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். டிரைவர்கள் 2 பேருடன் சேர்த்து மொத்தம் 61 பேர் இந்த பஸ்சில் பயணித்தனர்.

முதலில் இவர்கள் கேரள மாநிலம் சோட்டானிக்கரை, குருவாயூர் பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் நேற்று அதிகாலை, கேரளா வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் வந்தனர்.

இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்த்தனர். பின்னர் இரவில் கோவை செல்வதற்காக பஸ்சில் புறப்பட்டனர்.

பஸ் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில், குன்னூர் மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பை இடித்து கொண்டு அங்கிருந்த 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் இருந்த முப்புடாதி (67), முருகேசன்(63 ), இளங்கோ(64 ), தேவிகா(42), கவுசல்யா( 29), நிதின்(15), ஜெயா(50), தங்கம்(40) ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.

மற்றவர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு அபயகுரல் எழுப்பினர். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கயிறு கட்டி கீழே இறங்கி பஸ்சில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்த பகுதி மிகவும் இருளாக இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதிலும் டார்ச் ஒளி வெளிச்சத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை துரிதப்படுத்தினர்.

இறந்த 8 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு குன்னூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். காயம் அடைந்தவர்கள் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

செல்லம்மா என்ற மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து வேறு யாராவது பஸ்சில் சிக்கி இருக்கிறார்களா என்பதை அறிய இன்று காலையும் மீட்பு பணி தொடர்ந்தது.

அப்போது பஸ்சின் அடிப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது பெயர் பத்மராணி (57) என்பது தெரியவந்தது. அவரது உடலையும் மீட்டுபிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதனால் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

தொடர்ந்து பள்ளத்தில் சிக்கிய பஸ்சை வெளியே கொண்டு வரும் பணியை தொடங்கி உள்ளனர். கிரேன் உதவியுடன் பஸ்சை மீட்கும் பணி நடந்தது.

சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து, 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நீலகிரிக்கு விரைந்து வந்துள்ளனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர்(வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை) பிரபாகர், கலெக்டர் அருணா, டி.ஐ.ஜி.சரவணசுந்தர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.

பஸ்சில் சரியாக பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த பஸ் சரியாக பராமரிக்கப்பட்டு உள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

Similar News