தமிழ்நாடு செய்திகள்

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிச்சாட்டூர் அணையில் ஆய்வு

Published On 2022-12-24 15:43 IST   |   Update On 2022-12-24 15:43:00 IST
  • வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பிச்சாட்டூர் அணை முழுவதுமாக நிரம்பியது.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளம் புகுந்ததால் சுமார் 20 கிராமங்களில் சேதம் ஏற்பட்டது.

ஊத்துக்கோட்டை:

திருப்பதி மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணி அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் மதகுகள் வழியாக ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த தண்ணீர் ராமகிரி, சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பாலேஸ்வரம், காரணி, மங்கலம், ஆரணி, புதுவயல், பொன்னேரி வழியாக பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

இந்த ஆறு ஆந்திராவில் 20 கிலோமீட்டர் தூரத்துக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 60 கிலோமீட்டர் தூரத்துக்கும் பாய்கிறது. பிச்சாட்டூர் அணையின் உயரம் 31 அடி ஆகும். இதில் 1.893 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பிச்சாட்டூர் அணை முழுவதுமாக நிரம்பியது.

அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9-ந் தேதி உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் ஆரணி ஆற்று கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளம் புகுந்ததால் சுமார் 20 கிராமங்களில் சேதம் ஏற்பட்டது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள், சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பாலாறு கோட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா தலைமையில் அதிகாரிகள் ஜெயக்குமாரி, வெற்றிவேலன், ஜெயகுரு, பாலசுந்தரம், கண்ணன், சரவணன், புவனேஸ்வரி ஆகியோர் அடங்கிய குழு நேற்று பிச்சாட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தது.

தண்ணீர் வரத்து, இருப்பு, திறப்பு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மதகுகள் நன்றாக செயல்படுகின்றனவா என்று ஆராய்ந்தனர்.

அணைக்கு நீர்வரத்து அதிகமாகி உபரி நீர் திறக்கும்போது ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்படுகிறது. வெள்ளம் சேதத்தை தடுக்க ஒரே அடியாக அல்லாமல் படிப்படியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆந்திரா பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News