தமிழ்நாடு

கிருஷ்ணா தண்ணீர் திறப்பை வருகிற 1-ந் தேதி முதல் நிறுத்த வேண்டும்- தமிழக அதிகாரிகள் கோரிக்கை

Published On 2022-06-28 07:16 GMT   |   Update On 2022-06-28 07:16 GMT
  • செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான நீர் இருப்பதால் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.
  • கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் முழுவதும் தற்போது பூண்டி ஏரியிலேயே சேமிக்கப்பட்டு வருகிறது.

ஊத்துக்கோட்டை:

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது. இந்த தண்ணீர் கடந்த மாதம் 8-ந்தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 550 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

சென்னை குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் முழுவதும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதனால் இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு அதிகரித்து. 90 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் உள்ளது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. எனினும் தொடர்ந்து 3 நாட்கள் பலத்த மழை கொட்டியதால் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரை வீணாக வெளியேற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான நீர் இருப்பதால் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் முழுவதும் தற்போது பூண்டி ஏரியிலேயே சேமிக்கப்பட்டு வருகிறது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி ஆகும். இதில் தற்போது 1,383 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. எனினும் பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமிக்க அதிகாரிகள் விரும்பவில்லை. மேலும் ஏரியில் உள்ள நீர் திறப்பு மதகுகளை சீரமைத்து தண்ணீர் சேமிப்பை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதேபோல் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியிலும் போதுமான தண்ணீர் உள்ளது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறப்பை வருகிற 1-ந்தேதி முதல் நிறுத்த தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். அடுத்த கட்டமாக செப்டம்பர் மாதத்தில் தண்ணீரை திறந்து விடும்படி கூறி உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, சென்னை குடிநீர் ஏரிகளில் போது மான தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பை ஜூலை 1-ந்தேதி முதல் நிறுத்தும்படி ஆந்திர அரசிடம் கேட்டுக்கொண்டு உள்ளோம். தற்போது ஏரியில் உள்ள தண்ணீரை வைத்து சென்னையில் 8 மாதங்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்றனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம, சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி(11.7டி.எம்.சி) தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரிகளில் 8368 மி.கனஅடி(8.3டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News